கிராமப்புறங்களில் கொரோனா - ஒரு பொது சுகாதார கண்ணோட்டம்

[ஒரு பழங்குடி கிராம சோதனைச்சாவடியில் காட்சியளிக்கும் COVID-19 தடுப்பு வழிகாட்டுதல்கள் - உஷிர்ப்பார் கிராமம், கடிச்சிரோலி மாவட்டம். (புகைப்படம் - ஜிதேந்திர சர்மா)]
வெளிநாட்டுப் பயணிகளின் வருகை தடைசெய்யப்பட்டு இருப்பதாலும் மற்றும் குறைந்த மக்கள்தொகை நெருக்கத்தினாலும் கொரோனா பாதிப்பு கிராமப்புறங்களில் நேற்று வரை குறைந்தே காணப்பட்டது. ஆனால் நகரங்களிலிருந்த புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் அவர்களின் சொந்த ஊர்களுக்கு திரும்புவதால், அந்த நிலை மாறும் காலம் வந்துள்ளது.
இங்கு வன்ஷிகா சிங்க், மகாராஷ்டிராவின் கடிச்சிரோலியில் SEARCH என்னும் அரசு சாரா தொண்டு நிறுவனத்தை சார்ந்த பொது சுகாதார ஆராய்ச்சியாளர் யோகேஸ்வர் கல்கொண்டே-வை பேட்டி கண்டார். கொரோனாவினால் மருத்துவவசதி கூட நாட இயலாத இந்திய கிராமப்புற பகுதி மக்கள் சந்திக்கும் தனித்துவமான இன்னல்கள், மற்றும் இதனைத் தீர்க்க உதவும் சில வழிகளைப் பற்றியும் இவர்கள் உரையாடுகின்றனர்.
நமது கிராமப்புற சுகாதார அமைப்புமுறை, கொரோனாவின் குறுகிய மற்றும் நீண்ட கால தாக்கங்களை எதிர்கொள்ள தயாராக உள்ளதா?
சுகாதார மையங்களே நமது நாட்டு கிராமப்புறங்களில் முதன்மையான பாதுகாப்பு முறையாக உள்ளது. அவை நோயின் பரவலைக் குறைக்கவும் மருத்துவமனைகள் நோயாளிகளின் எண்ணிக்கையினால் நிரம்பும் நிலையைத் தடுக்கவும் உதவுகின்றன. ஆனால் இவற்றை நம் நாடு தனது சுகாதாரத்துறையின் முக்கிய அம்சமாக கருதாமல் இருப்பதே இந்த கொரோனா சூழ்நிலையில் புலப்படுகிறது.
கிராமப்புறங்களில் ஊரடங்கானது உரிய சுகாதார வசதிகளை நாட பெரும் தடையாக இருந்தது. மகப்பேறு மற்றும் குழந்தை நலம், தொற்று மற்றும் தொற்றா நோய்கள், அவசர அறுவை சிகிச்சை, போன்ற பல சேவைகள் பாதிக்கப்பட்டன. இதன் மூலம் மருத்துவ வசதிகள் கிராமங்களின் அருகிலேயே ஏற்படுத்தவேண்டும் என்பதை நாம் உணர முடிகிறது.. இரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு நோய் போன்ற நோய்களை கொண்டவர்கள் பெரும்பாலும் தொலைவிலிருக்கும் நகரத்திற்கோ அல்லது மாவட்டத் தலைநகருக்கோ சென்று தான் தங்களுக்கான சிகிச்சைப் பெரும் கட்டாயத்தில் இருக்கின்றனர். ஆகவே இந்த ஊரடங்கால், அவர்களின் அவசரகால சிகிச்சை பாதிக்கப்பட்டு, இறப்பு விகிதம் அதிகமாகவே வாய்ப்புள்ளது.
இந்த சர்வதேச நோய்ப்பரவலானது கிராமப்புறங்களில் ஏற்படுத்தும் விளைவுகள் பல கட்டங்களாகவே வெளிப்படுகிறது.
முதல் கட்டம்: ஊரடங்கு நீட்டிப்பு.
இரண்டாம் கட்டம்: புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் தங்களது ஊர் திரும்புவது.
மூன்றாம் கட்டம்: பயண நிபந்தனைகளைத் தளர்த்துவது.
இப்பொழுது நடைமுறையில் இருக்கும் அமைப்பு முறையில் என்ன குறைகள் உள்ளன? இந்த கொரோனா சூழலை நமது முதன்மை சுகாதார நிலையங்கள் எவ்வாறு கையாள வேண்டும்?
இது மிகவும் சரியான கேள்வி. தொழில்நுட்பத்தினால் இயங்கும் ஒரு நடைமுறையே இவ்வகையான கொரோனா சூழலை வெற்றி பெற முடியும் என்று பொதுவாக நம்பப்படுகிறது.. ஆனால் அது தவறு. என்னுடைய சுகாதாரத் துறையின் அனுபவத்தில் மிகவும் எளிமையான நடைமுறையை ஒரு வரையறுக்கப்பட்ட அமைப்பில் செயல்படுத்தும் போது நல்ல முடிவைத் தரும்.. ஆயுஷ்மான் பாரத் யோஜன என்னும் மருத்துவ காப்பீடு திட்டத்தின் கீழ் கிராமப்புறங்களில் சுகாதார மையங்கள் மெதுவாக நிறுவப்பட்டு வருகின்றன. இவை இன்று முற்றிலுமாக செயலில் இருந்தால் இந்த கிராமப்புற-நகர்ப்புற இடைவெளியைத் தவிர்த்திருக்கலாம்.
எனவே ஒரு திட்டத்தைப் பரவலாக்கும் போது தான் மிகுந்த பயன் உள்ளது. மக்களும் எளிதில் பயன் பெறுவர்.
ஊரடங்கு தளர்வு ஏற்படும் நேரத்தில் கிராமங்களில் கொரோனா தொற்று அதிகமாகும் என நாம் எதிர்பார்க்கிறோம். அப்படி அதிகமானால், பெரும்பான்மையான நோயாளிகளை முதன்மை சுகாதார நிலையங்களில் சேர்ப்பதே நாம் எதிர்கொள்ள உகந்த முதல் தந்திரமாகும். பின் அவசர மருத்துவ உதவி தேவைப்படுவோரை மட்டும் அருகில் இருக்கும் நகரத்திலோ அல்லது மாவட்ட தலைநகரத்திலோ உயர் மருத்துவ சிகிச்சைக்காக சேர்க்கலாம். நாம் அறிந்த வகையில், இன்று வரையில் 85% பேருக்கு மிதமாகவும் மீதமுள்ள 15% நோயாளிகளே மருத்துவமனையில் அவசர மருத்துவ உதவி தேவைப்படும் நிலையில் உள்ளனர். ஆகையால் மிதமாக கொரோனா உள்ள 85% மக்களுக்கு முதன்மை சுகாதார நிலையங்களில் அளிக்கும் சிகிச்சையே போதுமானதாக உள்ளது.
இந்த கொரோனா பரவல் அடுத்த கட்டங்களுக்குள் செல்லும் போது, கிராமப்புறங்களில் அதனை இரு நிலைகளில் நாம் எதிர்கொள்ள வேண்டும்: ஒன்று, தடுப்பு வழிமுறை மற்றும் மருத்துவ வசதி. தடுப்பு வழிமுறையானது, கிராமத்தில் முக்கிய பதவி வகிப்போருடன் சேர்ந்து, கிராமத்தில் இருக்கும் எளிதில் பாதிக்கப்படுவோரை கண்டறிந்து, அவர்களை பரிசோதனை செய்து, அவர்களிடம் தொடர்பில் உள்ளோரை அறிந்து, தனிமைப்படுத்த வேண்டும். கொரோனா நோய் அறிகுறி உள்ளோர் அதிகமானால், இந்த தடுப்பு நடவடிக்கைகள் முதன்மை சுகாதார நிலையத்தின் மூலம் எந்த அளவு செயல்படுத்தப்பட்டு இருக்கின்றன என்று தெரிய வரும்.
தாலூக்காவில் உள்ள கிராம மருத்துவமனைகள் மற்றும் மாவட்ட மருத்துவமனைகள் போன்ற இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்ட சுகாதார மையங்கள் ஏற்கனவே நோயாளிகளால் நிரம்பி உள்ளன. இங்கு மேலும் மருத்துவ வசதிகள் மற்றும் செயற்கை சுவாசக்கருவிகள் போன்றவற்றை நிறுவுதல் மிகவும் கடினமானது. எனவே கிராமங்கள் கொரோனாவை எப்படி எதிர்கொள்ளும் என்பது போக போகத்தான் தெரியும். ஆனால் இந்த சூழ்நிலையிலும் நமது கிராமங்களின் ஆரம்ப சுகாதார நிலையங்களை வலிமைப்படுத்தி கிராம மக்களின் உடல்நலத்தை கொரோனாவைத் தாண்டியும் மேம்படுத்த ஒரு வாய்ப்புள்ளது.
நகரங்களிலிருந்து கிராமங்களுக்கு புலம்பெயரும் தொழிலாளர்களால், ஏற்கனவே பலவீனமாக இருக்கும் கிராமங்களின் சமூகப் பொருளாதாரத்தை மேலும் நலிவடைய செய்யும் நிலையில் வாழ்வாதாரங்களைப் பாதுகாத்தல் எப்படி முதன்மை படுத்தப் படுகிறது?
புலம்பெயரும் தொழிலாளர்கள் தங்கள் ஊர்களில் வேலை வாய்ப்பு இல்லாததாலும் விவசாயத்தின்மேல் நாட்டமில்லாததாலும் தான் தாங்கள் வசிக்கும் ஊரை விட்டு வெளியூரில் வேலைக்கு செல்கிறார்கள். இந்த பேரழிவு காலத்தில், நகரத்திலிருந்து கிராமத்திற்கு வருவோரையே நாம் பெரிதும் கவனிக்கிறோமே தவிர பலர் ஒரு கிராமத்திலிருந்து வேறொரு கிராமத்திற்கும் புலம்பெயர்கின்றனர் என்பதை நாம் கவனம் கொள்வதில்லை. பல விவசாயிகள் மற்றும் விவசாய தொழிலாளிகள் பக்கத்து மாநிலங்களுக்கு வேலைக்கு சென்று விட்டு மீண்டும் தங்கள் மாநிலம் வரும்போது, தகுந்த சாப்பாடு மற்றும் தங்க வசதிகளுடன் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்படுகின்றனர். பல இடங்களில் இது நன்றாக கையாளப்பட்டிருந்தாலும், கிராமம் விட்டு கிராமம் புலம்பெயர்ந்து மீண்டும் தங்கள் கிராமம் வரும் போது இந்த வசதிகள் இல்லை. எனவே பலர் திறந்த வெளி வயல்களில், போதிய வசதிகள் இல்லாது 14 நாட்கள் தனிமைப் படுத்தப்படுகின்றனர்.
இவ்வாறு தங்கள் ஊர் திரும்பியவர்களில் ஒரு சிலரை இந்த சம்பா பருவம் விவசாயத்திற்குள் இழுத்தாலும் பலர் தங்கள் ஊரில் விவசாயம் பார்த்துக் கொண்டு நிரந்தரமாக தங்கி விட விரும்புவதில்லை. இயல்பான நிலை திரும்பிய பின் அவர்கள் தங்கள் நகர வேலைகளுக்கு திரும்பவே விரும்புவர். ஆனால் நகரத்தின் தொழிற்சாலைகள் இவர்களை மீண்டும் அனுமதிக்கும் நிலையில் இருக்குமா என்பதை காலமே கூறும். ஆனால் இவர்களுள் மேலும் சிலர் தங்கள் ஊர் திரும்புவதில் உண்டான கசப்பான அனுபவத்தால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர். எனவே இவர்கள் மீண்டும் உடனடியாக நகரம் திரும்ப மிகவும் தயங்குகின்றனர். மொத்தத்தில் இந்த கொரோனா நோய்த்தொற்று, கிராமப்புறங்களில் சமூக மற்றும் பொருளாதார இன்னல்களை கண்டிப்பாக அதிகரிக்கும்.
கிராமப்புற வாழ்வாதாரங்களை உயர்த்த, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டம் (MNREGA) போன்ற பல திட்டங்களை இந்திய அரசு வெளியிட்டுள்ளது. எனவே, மத்திய மற்றும் மாநில அரசுகள் இப்படியான ஒரு காலகட்டத்தில் கிராமப்புறங்களில் கவனம் செலுத்தி வேலைவாய்ப்பினை கூட்டவேண்டும். இது அடுத்த சிறிது காலத்திற்காவது புலம்பெயர்தலை குறைக்கும்.
ஊரடங்கின் போது கட்சிரோலி-யில் கொரோனவால் பாதிக்கப்பட்டோர் குறைவாகவே இருந்தனர். SEARCH - ஒரு சுகாதாரத்தை மையமாக கொண்டு செயல்படும் நிறுவனம். நீங்கள் கிராமப்புறங்களிலும் பழங்குடியினரிடையும் இந்த நோய்த்தொற்றை எதிர்த்துப் போராட எந்த விதமான யுக்திகளை கையாளுகின்றீர்கள்?
கட்சிரோலியில் சில வாரங்களுக்கு முன்பு வரை எந்த விதமான கொரோனா பாதிப்பும் இல்லை. ஆனால் இப்போது 40 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், அனைவரும் மும்பையிலிருந்து திரும்பியவர்கள்.
கட்சிரோலி-யிலுள்ள 130 கிராமங்களில் சராசரியாக 10000 பேர் அடங்கிய சமூகத்தினருடன் SEARCH வேலை செய்து கொண்டிருக்கிறது. COVID-19 என்பது ஒரு நீண்ட கால அபாயம் என்பதை உணர்ந்தவுடன், இதனை சமாளிக்க சமூகத்துக்கு உதவும் வண்ணம் மும்முனை செயல்திட்டம் ஒன்று தொடங்கப்பட்டுள்ளது.
இதன் முதல் அம்சம், அவர்களின் கலாச்சாரத்திற்கு ஏற்ப விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி மக்களை தானாகவே செயல்பட வைத்தல். கட்சிரோலியில் 40% மக்கள் பழங்குடியினர் என்பதால், விழிப்புணர்வு சார்ந்த காணொளிகாட்சிகள் மற்றும் சிறு பாடல்களை நாங்கள் அவர்களின் தாய்மொழியான கொண்டி-யில் காண்பித்தோம். இப்படி ஒடுக்கப்பட்ட சமூகத்தினருக்கே உரிய தனிப்பட்ட தேவைகளைப் பற்றி நாங்கள் மேலும் அறிந்து அவர்களின் நம்பகத்தன்மையுடன் வேலைகளை மேற்கொள்வது அவசியமாகிறது.
SEARCH-ஆனது கிராமங்களுடன் சேர்ந்து பணியாற்ற பல உள்ளூர் செயற்குழுக்களை நிறுவி உள்ளது. இக்குழுவில் இருப்போர்க்கு அடுத்த ஆறு மாதத்தில் என்ன எதிர்பார்க்கலாம், அப்படி நடந்தால் சமூக அளவில் என்ன செய்ய வேண்டும் போன்றவை பயிற்றுவிக்கப்படுகின்றன. இந்த குழுக்கள் புலம்பெயர்தல் நடப்பதற்கு முன்பே நிறுவப்பட்டன. இதனால், புலம்பெயர்ந்தோர் வந்தவுடன், இந்த உள்ளூர் செயற்குழுக்கள் தனிமைப்படுத்தும் வசதிகளை விரைவாக அமைத்தனர்.
மேலும் இந்த குழுக்கள் கிராம பஞ்சாயத்துடன் இணைந்து --”கிராமத்தில் சோதனை நிலையம் அமைப்பது, முகமூடி விநியோகம், கைகளை கழுவ சோப்பு மற்றும் சானிடைசர் விநியோகம் மற்றும் அடிக்கடி கைகழுவுதல் போன்ற பழக்கமுறைகளை ஊக்குவித்தல்” - இவ்வாறான முதன்மையான நடவடிக்கைகளை மேற்கொண்டனர். மேலும் அந்த மாவட்ட ஆட்சியரின் வழிமுறைகளின்படி, ஒரு நபருக்கு கொரோனா அறிகுறி ஏற்பட்டால் என்ன செய்வது, அவரை எங்கு அழைத்து செல்வது மற்றும் அடுத்தடுத்து என்ன செய்வது போன்றவற்றை பயிற்றுவித்தோம்.
நிறைவாக, இந்த கிராமங்களின் உள்ளூர்வாசிகளுடன் தொடர்பில் இருந்து, எவ்வளவு தடுப்பு முறைகள் செயல்படுத்தப் பட்டுள்ளன மற்றும் என்னென்ன நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்பதைக் கண்டறிந்து அதனை ஆராய்ந்து, அதில் இருந்து பெறப்படும் கருத்துக்களை சமூகத்தினருக்கு தகவலாகத் தருகிறோம்.
நரம்பணு-நோய்யெதிற்பியலில் பயிற்சி பெற்ற யோகேஸ்வர் கல்கொண்டே, மகாராஷ்டிராவின் கடிச்சிரோலி மாவட்டத்தில் உள்ள Society for Education, Action and Research in Community Health (SEARCH) என்னும் அரசு சாரா தொண்டு நிறுவனத்தை சார்ந்தவர,. இவர் Wellcome Trust/DBT India Alliance - இல் ஆராய்ச்சியாளராகவும் SEARCH-இல் தலைமைப் பொறுப்பிலும் செயல்பட்டுக்கொண்டு, கடிச்சிரோலி-யின் கிராமப்புற மற்றும் பழங்குடியின மக்களுக்கு தீவிரமான தொற்றாத-நோய்களுக்கான சுகாதார வசதிகளை வழங்குதல் பணியை முன்னின்று நடத்திக்கொண்டிருக்கிறார்.
வன்ஷிகா சிங்க் நரம்பணுவியல் மூத்த ஆராச்சியாளர். இவர் பொது ஜனங்களிடம் அறிவியலைப் பரப்பும் நயத்தின் மீது நாட்டம் உடைய ஒரு சார்பில்லா எழுத்தாளர்.
தமிழில் மொழிபெயர்ப்பு: ரோகிணி முருகன்